அதுல் கெசாப்பை வழியனுப்ப குவிந்த அமைச்சர்கள், இராஜதந்திரிகள்

அதுல் கெசாப்பை

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தனது பணிகளை முடித்துக் கொண்டு நேற்றிரவு – தனது குடும்பத்தினருடன் கொழும்பில் இருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

மூன்று ஆண்டுகள் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்த நிலையில், அதுல் கெசாப் அமெரிக்கா திரும்பியுள்ளார்.

இதனை முன்னிட்டு, அவரை வழியனுப்புவதற்காக, நேற்று அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில், அமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கூடியிருந்தனர்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, வெளிவிவகாரச் செயலாளர் பிரசாத் காரியவசம், ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ, மற்றும் இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்ட பல வெளிநாட்டு தூதுவர்கள் இராஜந்திரிகளும் அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நடந்த பிரியாவிடை நிகழ்வில் பங்கேற்றனர்.

இலங்கையில் இருந்து புறப்படுவது தொடர்பாக அதுல் கெசாப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு ஒன்றில், தாம், இலங்கையின் அனைத்து மக்களினதும் மகிழ்ச்சி, அமைதி, சுதந்திரம், மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்வதாகவும், அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை, இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக அலய்னா பி ரெப்ளிட்ஸ் பொறுப்பேற்கவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அவர் செனட் அங்கீகாரத்துக்காக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]