அதிகாரப் பகிர்வை முறையாகப் பேணினால் பல்லின மக்கள் வாழும் நாட்டில் நல்லாட்சி சிறக்கும்

பல சமூகங்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வுகள் சரியாக நடைபெற்றால் இந்த நாடு சிறந்த நாடாக இருக்கும் என்று ஐக்கிய தேசிய கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 40ஆவது நினைவு தினத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

பல சிறுபான்மை இனத்தவர்கள் இருக்கின்ற இந்த நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, அபிவிருத்தி போன்றவற்றில் தங்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என அவர்கள் கோருவார்கள். ஆனால், சிறுபான்மை இனத்தவர்கள் புவியியல் பிரதேசத்தில் அதிகளவில் செறிந்து வாழும்போது, அவர்கள் சமவுரிமை, சமவாழ்வு என்பதுடன் மட்டும் நின்று விடுவதில்லை. அதிகளவான தமது உரிமைகளை, அதிகாரப் பகிர்வுகளை விகிதாசாரப்படி கோருவார்கள்.

புவியியல் ரீதியாக ஒரு பிரதேசத்தில் அதிகளவில் சிறுபான்மை இனங்கள் செறிந்து வாழும்போது, அவர்கள் தமக்குரிய உரிமைகளை அழுத்திக் கேட்பார்கள். இன அரசியல் முரண்பாடு, ஒரு வருமான அடிப்படையிலான பிரச்சினை மட்டுமல்ல, அது அரச அதிகாரம் சம்பந்தப்பட்டதும் ஆகும் என்பது அதன் அர்த்தமாகும். நான் கடந்த காலத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த பேராசிரியர் ஒருவர் தமிழர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது? நாங்கள் அவர்களுடன் வாகனங்களில் ஒன்றாகப் பயணிக்கின்றோம்; ஒன்றாக இருந்து தேநீர் அருந்துகின்றோம்; அப்படி இருக்கையில் அவர்களுக்கு இந்த நாட்டில் என்ன பிரச்சினைகள் இருக்கின்றன எனக் கேட்டார்.

அப்போது நான் சொன்னேன்; அதுவேதான் பிரச்சினையாக இருக்கின்றது. நீங்கள் தமிழர்களுடன் தேநீரைப் பகிரத் தயாராக இருக்கின்றீர்கள். ஆனால், அதிகாரங்களைப் பகிரத் தயாராக இல்லை எனத் தெரிவித்தேன்.

உலகத்து நாடுகளில், பல்லின மக்கள் வாழும் நாடுகளில் இருக்கின்ற பெரும்பான்மை இனத்தவர்கள் தமது அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இலகுவில் ஒத்துக்கொள்வதில்லை. இலங்கையில் உள்ள பிரச்சினை என்னவெனில், பெரும்பான்மை இனம் அதிகாரப் பகிர்வை வழங்க மறுத்ததால் சிறுபான்மைத் தரப்பு பிரதேச சுயாட்சியைக் கோரிய நிலையில் பெரும்பான்மை இனத்தவரது விடாப்பிடியான பிடிவாதத்தால் பிரிவினை வாதம் நோக்கி சிறுபான்மை இனம் நகர்ந்தது.

ஒற்றையாட்சியில் இயங்குகின்ற அரசுகளுக்கு உதாரணமாக விளங்குகின்ற பெரிய பிரித்தானியாவில் அதிக அளவில் அதிகாரப் பகிர்வு காணப்படுகின்றது.ஸ்கொட்லாந்து, வடநெதர்லாந்து போன்ற நாடுகளில் அதிகாரப் பகிர்வு இருக்கின்றது. பிரித்தானிய அரசியல் யாப்பு, எழுதப்பட்ட அரசியல் யாப்பு அல்ல. நடைமுறையில் அது சமஷ்டி ஆட்சியாக இருப்பதை அவதானிக்க முடியும்.

1930களில் தமிழர்கள் சமஷ்டி மற்றும் அதிகாரப்பகிர்வைக் கோரவில்லை. முழுச் சிங்கள அரசுக்கு தலைமை தாங்கிய எஸ்.பண்டாரநாயக்க அதனைக் கோரியிருந்தார். இந்த சமஷ்டித் தத்துவம் தொடர்பாக ஆறு கட்டுரைகளை அவர் எழுதியிருந்தார். எனவே, முதன்முதலாக தமக்கு அதிகாரப்பகிர்வு வேண்டும்; சமஷ்டி வேண்டும் என வலியுறுத்தியவர்கள் தமிழர்கள் அல்லர். கண்டிய சிங்களவர்கள் தான் முதலாவதாக இவற்றைக் கோரியவர்கள்.

ஆகவே, பண்டாரநாயக்க மற்றும் கண்டிய சிங்களவர்கள் கோரிய பிறகுதான் தமிழர்கள் இவற்றைக் கோரினார்கள்.

அந்தக் காலங்களில் தமிழர்கள் தமது பங்குக்குக் கோரியது சம பல பிரதிநிதித்துவம். ஐம்பதுக்கு ஐம்பது என்று அது குறிப்பிடப்பட்டது. தமிழர்கள் மைய அரசை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். 1931ஆம் ஆண்டு டொனமூர் ஏற்பாட்டில் பிரித்தானிய நிர்வாகிகளுடன் 7 பேரைக் கொண்ட அமைச்சரவை இருந்தது. அந்த அமைச்சரவையில் ஒரு தமிழரும் உள்ளடங்கியிருந்தார்.

1936ஆம் ஆண்டில் அமைச்சரவை உறுப்பினர்களை ஒருவிதமாக மாற்றி அமைத்து முழுச் சிங்கள அமைச்சரவையை உருவாக்கினார்கள். இந்தக் கணக்கு வாய்ப்பாட்டை அமைத்துத் தமிழர்களோ, முஸ்லிம்களோ இடம்பெறாத வகையில் அமைச்சரவையை உருவாக்கிக் கொடுத்தவர் கணிதத்துறையில் மேதாதையாக இருந்த தமிழனான சி.சுந்தரலிங்கம் எனச் சொல்லப்படுகின்றது.

முழுச் சிங்கள அமைச்சரவை அமைக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு மிகவும் சூசகமான செய்தியாக இருந்தது. அப்படி இருந்த போதிலும் தமிழர்கள் மைய அரசை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். தமிழர்களுக்கு சுயாட்சி வேண்டும் என்பதை முதலில் வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றிய கட்சி இலங்கை கம்னியூனிஸ்ட் கட்சியாகும்.

சோல்பரி யாப்பு முன்வைக்கப்பட்டபோது இந்த அதிகாரப் பகிர்வு தொடர்பில் எவரும் பாரதூரமான முன்மொழிவுகளை முன்வைக்கவில்லை.1947ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தமிழர்களுக்கான தலைமைக் கட்சியாக தமிழ்க் காங்கிரஸ் கட்சி இருந்தது. இந்தக் கட்சி தேர்தலில் போட்டியிட்டு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. அப்போது பிற்போக்கு வலதுசாரி கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தது. அப்படி இருந்தபோதிலும் மலையக மக்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டபோது காங்கிரஸ் மௌனமாக இருந்தது.

இந்தநிலையில், தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்த செல்வநாயகம் மட்டும் வெளியேறினார். இரு மொழிக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்த தென்னிலங்கைக் கட்சிகள், தங்களது நிலைப்பாட்டை மாற்றி சிங்களமொழி மட்டும் ஆட்சிமொழி எனத் தீர்மானிக்க, தமிழ் மக்கள் எஸ்.ஜே.வி. பக்கம் வந்தனர். பின்னர் இடதுசாரிகள் தனிச்சிங்கள மொழியே அரச கருமமொழி என்பதற்கு எதிராக இரண்டு மொழிகள் என்றால் ஒரு நாடு; ஒரு மொழியென்றால் இரண்டு நாடுகள் என உறுமினார்கள். ஆனால், அதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை.

பண்டாரநாயக்க பிரதேச சபை அதிகாரம் போன்ற விடயம் தொடர்பில் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துடன் ஒரு உடன்படிக்கை மேற்கொண்டார். ஆனால், இந்த உடன்படிக்கைகளை சிங்கள பெரும்பான்மை இனத்தின் தீவிர போக்குடையவர்கள் எதிர்த்தார்கள். பண்டாரநாயக்க உடன்படிக்கையை கிழித்து எறியவேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாட்டில் இனக்கலவரம் உருவானது. பின்னர் 1965ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்துக்கு வந்தபோது மாவட்ட அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் செல்வநாயகத்துடன் உடன்பாட்டுக்கு வந்தனர். ஆனாலும், இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்தது. இதனால் மேலும் முரண்பாடுகள் வலுத்தன.

1972ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசியல் நிர்ணய சபை நடைமுறை இழக்கப்பட்ட பொன்னான வாய்ப்பு ஆகும். அப்போது செல்வநாயகம் தனது உரையில் நேருவின் கருத்தை மேற்கோள் காட்டி இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டபோது நேரு சொன்னார், நாங்கள் எல்லோரும் பொதுவான கருத்துக்கு வரவேண்டும்; அதே மனத்தோடு நாங்கள் இங்கு அமர வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

அரசியல் நிர்ணய சபையில் சிங்களத்தலைவர்கள் ஒற்றையாட்சிக் கொள்கையை முன்வைத்தனர். செல்வா சமஷ்டி முறைமையை முன்வைத்தார். ஆட்சி முறை தொடர்பில் முக்கிய உரையை தர்மலிங்கம் நிகழ்த்தினார். நாங்கள் பிரிவினையை ஆதரவிக்கவில்லை; அதற்கு மாற்றீடாக அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பரிசீலனை செய்வோம் எனத் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய முன்னணி அரசு ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தால் அதன் பின்னர் வந்த அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்காது. செல்வநாயகம் காலமாகி மூன்று மாதங்களில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனது கொள்கைப் பிரகடனமாக சுதந்திர சோஷலிச தமிழீழம் என்ற கோரிக்கையை முன்வைத்தது. 1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி தனது பிரகடனத்தில் தமிழர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன. அதனைத் தீர்க்க ஒரு வட்ட மேசை மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாகத் தெரிவித்தது. ஆனால், தேர்தல் நடந்த பின்னர் வட்டமாகவோ அல்லது சதுரமாகவோ ஒரு மாநாடும் நடத்தப்படவில்லை. பின்னர் 1987ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி நிர்ப்பந்தத்தின் பேரில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைத்தது. இந்த சட்டத் திருத்தம் வந்த பின்னர் வந்த மத்திய அரசுகள் அதன் ஊடாக அதிகாரங்களைப் பகிர்வதில் நாட்டம் காட்டவில்லை என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]