அடுத்த முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலின்பின்னர் அரசாங்கத்திலும் அமைச்சரவையிலும் மற்றும் றவூப் ஹக்கீமின் அமைச்சுப்பொறுப்பிலும் பாரிய மாற்றம் ஏற்படுமென இராஜாங்க அமைச்சர் எம்எல்ஏஎம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அடுத்த முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இன்னும் எட்டு ஆண்டுகள் அவரே ஜனாதிபதியாக இருப்பார் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் செவ்வாய்கிழமை (30) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இக்கருத்துக்களை குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்எஸ். சுபைர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் மேலும் பேசுகையில் — எதிர்வரும் தேர்தலின்பின்னர் ரணில் விக்ரம சிங்க பிரதமர் பதவியிலிருந்து தூக்கி வீசப்படுவார். சிறி லங்கா சுதந்திரக்கட்சி தனியான ஆட்சியை அமைக்கும். அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமின் அமைச்சுப் பொறுப்பு மாற்றப்பட்டு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான முழுப்பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி, மாகாண நிருவாகம், அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் வசமிருக்கும். அந்த அடிப்படையில் அதிகாரமுள்ளவர்களினால்தான் எமது பிரதேசத்தை அபிவிருத்தியினால் கட்டியெழுப்ப முடியும். எனவே ஆட்சி அதிகார தரப்பினருக்கே இத்தேர்தலில் வாக்களிக்கவேண்டும்.

நாங்கள் உங்களது வாக்குகளைப் பெற்று எதையும் அடைந்துகொள்ளப்போவதில்லை. உங்களுக்கு நாங்கள் நன்மைகளைச் செய்வதற்காகவும் தற்போது ஆபத்தான சூழலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தைக் காப்பதற்காகவுமே நாங்கள் இந்த தேர்தலில் வாக்கு கேட்டுநிற்கிறோம்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் ஒட்டுமொத்தமாக எமது சமூகத்தை விற்றுவிடக்கூடிய ஆபத்து காத்திருக்கிறது. எங்களது பசி, அகதி வாழ்வு கஷ்டத்தைப்பற்றியும் எங்களது சகோதரர்கள் இரத்தத்திலே புரண்ட வரலாற்றையும் அவர்களுக்குத் தெரியாது. இந்த துன்ப துயரங்களை அவர்கள் அனுபவிக்கவில்லை.

கடந்த 17 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கிவந்த வாக்குகளுக்கு எமது சமூகம் எதையும் பெறாத நிலையில் தத்ளித்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாங்கள் ஒன்றுபட வேண்டிய தேவை எமக்கு உள்ளது.

ஏறாவூர்ப் பிரதேசத்தில் பல தேவைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றவேண்டிய பதவிகளையும்; முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் வைத்திருந்தவர்கள் செய்யாததன் காரணமாகவே எமது மக்களின் தேவைப் பட்டியல் நீண்டு செல்கிறது.

சகோதரர் பஷீர் சேகு தாவூத் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் பக்க பலமாக இருந்தவர் தவிசாளராகவும் இருந்தவர். அவரைக்கூட வெளியேற்றியுள்ளார்கள். அதாவுல்லா தொடக்கம் ஹசன் அலி வரை வெளியேற்றப்பட்டுள்ளார்கள். நல்லவர்கள் அங்கு இல்லை. சந்தர்ப்பத்துக்கு ஏற்றவகையில் ஆட்களை உள்வாங்கி தேர்தல்களில் வெற்றிபெறுகின்ற உபாயங்களைச் செய்து தன்னுடைய கதிரையைப் பலப்படுத்தும் அத்தனை உபாயங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் செய்துகொண்டுவருகின்றது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]