அடித்துக் கொலை செய்யப்பட்ட மூதாட்டி

யாழ்ப்பாணம்; வீட்டில் தனியாக இருந்த 72 வயது மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், தலையில் அடிகாயம் காணப்படுவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மானிப்பாய் ஆணைக்கோட்டை பொனனையா வீதிப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் (21) இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா என்ற மூதாட்டியே தலையில் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மூதாட்டி, உறவினர்கள் இன்றி தனது வீட்டில் தனியாக வசித்து வருகின்றார். இவர் நடக்கமுடியாதவர் என்றும் வீல்ச் செயார் மற்றும் ஊன்றுகோல் பயன்படுத்தி நடப்பவர்.

இவரது பெறாமகன் கிளிநொச்சியில் வசித்து வருகின்றார். வழமையாக பெறாமகன் வந்து பார்வையிட்டுச் செல்வதுடன், இவருக்கான உணவுகளை வேறு நபர்களிடம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். நேற்று மதியம் உணவு கொடுக்கும் இளைஞர் வந்து மூதாட்டிக்கு உணவு கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அதேநேரம் இந்த மூதாட்டிக்கு பாதுகாப்பாக அவரது மைத்துனர் ஒருவர் வழமையாக இரவில் மூதாட்டியுடன் தங்குவதாகவும், நேற்று இரவு 7.30 மணியளவில் அந்த வயோதிபர் வீட்டிக்கு வந்த போதே, வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டிருந்ததுடன், மின்சாரம் இன்றி இருட்டாக வீடு காணப்பட்டுள்ளது.

பதறிய வயோதிபர் மின்சாரத்தின் சுவிட்சினை போட சென்ற போது, ரிப் சுவிட்ச் விழுத்தப்பட்ட நிலையில் இருந்ததுடன், மூதாட்டி தலையில் காயங்களுடன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அந்த வயோதிபர் உடனடியாக மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளர். அந்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குப் பொலிஸர் சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது, மூதாட்டியின் காதில் அணிந்திருந்த தோடு மற்றும் கையில் போட்டிருந்த மோதிரம் ஆகியவற்றினைக் காணவில்லை என்றும் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.

மூதாட்டியின் நகைகள் காணாமல் போயுள்ளமையினால் திருட்டிற்காக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிப்பதுடன், கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.