அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் – ஜனாதிபதி வாழ்த்து

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

பொறுமை, அடக்கம், அறிவு, ஆன்மீகம் போன்ற நற்பண்புகள் மனித மனங்களில் குடிகொள்ள வேண்டுமாயின் அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஔி தரும் தீபங்களால் தீமை எனும் இருள் அகன்று நன்மையெனும் ஔி எழுவதை போல் வாழ்க்கையிலும் ஔி எழ வேண்டும் என்பதையே தீபாவளி பண்டிகை குறித்து நிற்கின்றது. அத்தோடு ஒருவருக்கு ஒருவர் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து அன்பை பரிமாறிக்கொள்ளும் ஒரு கலாச்சார நிகழ்வாக இத்தீபத்திருநாள் உலக மக்களை அன்பினால் இணைக்கிறது.

பல தசாப்தங்களாக பகைமையினால் ஏற்பட்ட பல்வேறு வேதனைகளை சுமந்து நிற்கும் ஒரு சமூகம் என்ற வகையில் இனங்களுக்கு இடையேயான பகைமையை நீக்கி புரிந்துணர்வையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதன் மூலமே நாடும் மக்களும் நலம் பெறுவர் என்பதை நமது சமூகம் மிக நன்றாக உணர்ந்திருக்கும் இத்தருணத்தில் மலரும் தீபாவளி பண்டிகை நம்மவர்களுக்கிடையிலான கலாச்சார பந்தத்தினை உறுதிபடுத்திக் கொள்ள கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாகும் என்பதே எனது எண்ணமாகும்.

தீமையை போக்கும் தீபத்திருநாளை மகிழ்ச்சியோடும் அர்த்தபுஷ்டியோடும் கொண்டாடும் அதேவேளை, அதன்மூலம் அன்பையும் நற்பண்புகளையும் வளர்க்க முயற்சிக்கும் உலக வாழ் இந்துக்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]