அச்சுறுத்தல்கள் இல்லாததாலேயே மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது

அச்சுறுத்தல்கள் இல்லாததாலேயே மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு கடும் உயிர்அச்சுறுத்தல் இருக்கின்றது. அவர் கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுகின்றது வேளையில் அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் நேற்று நாடுமன்றில் விமல் எம்பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கையில்,

அதி முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளானது அச்சுறுத்தல்கள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரமே மேற்கொள்ளப்படும்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகளை பொறுத்த வரையில், ஜே.ஆர். ஜயவர்தன 1988 ஆம் ஆண்டு பதவியில் இருந்து ஓய்வுபெறும் போது 65 உத்தியோகஸ்த்தர்கள் அவரது பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மரணிக்கும் போது அது 18 ஆக குறைந்திருந்தது.

டி.பி. விஜேதுங்க 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் போது அவருக்கு 78 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அமர்த்தப்பட்டிருந்ததுடன், அவர் மரணிக்கும் போது அது 12 ஆக குறைவடைந்திருந்தது.

அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் போது அவரது பாதுகாப்புக்கு 198 இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வழங்கப்பட்டிருந்தனர். பின்னர் பாதுகாப்பு தரப்பினரின் குழுவொன்றில் ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய அவரது பாதுகாப்பு 12 இராணுவ மற்றும் 69 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் போதும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்புக்கு 59 பேர் இருக்கின்றனர். –என்றார்.

மஹிந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் போது அவரது கோரிக்கைக்கு அமைய 102 இராணுவத்தினரும் 103 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அவரது பாதுகாப்புக்கென வழங்கப்பட்டிருந்தனர். எனினும், அதிமுக்கிய பிரமுகர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்குவது என்ற கொள்கைத் தீர்மானமொன்றை எமது அரசு எடுத்தது.

அதற்கமைய, மஹிந்தவின் பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்து 100 இராணுவத்தினர் திரும்ப பெறப்பட்டு அவர்களுக்கு பதிலாக அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 100 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வழங்கப்பட்டனர். அதற்கு மேலதிகமாக 26 விசேட அதிரடிப்படையினரும் அவரது பாதுகாப்புக்கென வழங்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு மொத்தமாக 229 உத்தியோகஸ்தர்கள் வழங்கப்பட்டிருந்தனர்.

எனினும், தற்போது அதிலிருந்து 42 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு திரும்ப அழைக்கப்பட்டவர்களில் விசேட அதிரடிப்படையினர் உள்ளடங்கவில்லை. எப்படியிருப்பினும், 26 விடேச அதிரடிப்படையினர் உட்பட 187 உத்தியோகஸ்தர்கள் தற்போது மகிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு கடமையில் இருக்கின்றனர்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ போன்ற அதிமுக்கிய பிரமுகர்களுக்கு இருக்கக் கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்யப்பட்டே அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதற்கமைய, தேவைக்கேற்ப கூட்டியும் குறைத்தும் உரிய பாதுகாப்புகளை வழங்குவது பொலிஸ் மா அதிபரின் பொறுப்பாகும்.
எவ்வாறிருப்பினும், மே தினக் கூட்டம் போன்ற விசேட நிலைமைகளின் போது தேவையான மேலதிக பாதுகாப்புகள் வழங்கப்படும். அதைவிடுத்து இதில் அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது. அச்சுறுத்தல்கள் பற்றிய மதிப்பீடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]