இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோனது  ஜப்பான். ஜப்பான் தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் எப்போதும் தோல்வியை விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் கொண்டு மீள நினைத்தனர். அவரிகளின் கடும் உழைப்பால், ஜப்பான் இன்று உலக வல்லரசு.

பலர் சேர்ந்து உருவாக்கிய ஜப்பான் தேசத்தின் தலைவர்களில் முக்கியமான ஒருவர் இருக்கிறார் .உலக வரலாறு எப்போதும் போற்றும் நபர். Made in japan என்ற வார்த்தைக்கு உலகத்தின் நம்பிக்கையை விதைத்தவர் அக்யோ மொரிட்டா.SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர்.

1921 ஆம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி  ஜப்பானின் மெஹோயா நகரில் பிறந்தவர் அக்யோ மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம்.பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார் தந்தை.சிறுவயது முதலே மின்னியல் பொருள்கள் மீது மொரிட்டாவிற்கு ஆழ்ந்த ஈடுபாடு.இயற்பியலில் பட்டம் பெற்றார்.ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார்.அப்போது மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது.நிறைய விடயங்களை கற்றுக்கொண்டார்.இரண்டாம் உலகப்போர் முடிந்தது. பரம்பரை தொழிலை செய்து பணம் ஈட்டுவதை விட உலகை திரும்பி பார்க்கவைக்கும் விடயத்தை செய்துகாட்ட நினைத்தார்.1946 ஆம் ஆண்டு தனது 25வது வயதில் தனது நண்பர் மசார் இபுக்காவுடன்  “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார்.புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா ஈடுபட, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார் மொரிட்டா.

டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவுகருவியை உருவாக்கினார்கள்.அளவில் பெரிதாகவும் விலை அதிகமாவும் உள்ள அதனை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்தவர் சிறிய வானொலியை உருவாக்கினார்.இதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதை பயன்படுத்தி சிறிய வானொலியை உருவாக்கியவர் அதை அமெரிக்கர்களுக்கு விற்க ஆரம்பித்தார்.ஜாப்பனின் வெற்றிகர பொருளாதாரத்தின் அடித்தளம் அங்கிருந்து ஆரம்பித்தது.

தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார்.இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி,அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் அத்தோடு இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.தரக்கட்டுப்பாடுக்கென்றே தனது நிறுவனத்தில் தனித்துறையை உருவாக்கினார்.

சில வருடங்களில் அமெரிக்காவிலும் நிறுவனக்கிளையை தொடங்கி, அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா ஈடுபட்டார். அடுத்து வாக்மேன் கண்டுபிடித்தார். பலரும் அவரை கேலி செய்தனர்.மூட சிந்தனை என்று சிரித்தார்கள்.

1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் விற்பனையானது அதன் பிறகு தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது.
அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலமானது. 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது.உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் நிறுவன பொறுப்புகளிலிருந்து விலகினார்.

மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹாவை தனக்கு பின்னரான நிறுவன பொறுப்பாளியாக நியமித்தார் தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவரின் சொத்து மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான். தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது,
ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன.
Made in japan என்ற அவரது சுயசரிதை அவரின் உன்னதங்களை உணர்த்தும் நூல் பல வளரும் தொழில் முனைவர்களுக்கு பாடமாக உள்ளது.