அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளரின் வீட்டை உடைத்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளரின் வீட்டினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் நேற்று (29) இரவு தாக்கியதுடன், பல உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், நால்வர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள்

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பன்சாலை 2ம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள ஜ.றிஸ்வான் என்பவரின் வீட்டினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் வருகை தந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தால் இதுதான் நிலைமை என்று கூறி தாக்கியுள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்து சீசீடிவி கமராக்கள் அனைத்தும், தொலைக்காட்சி, பிளேயர், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட இவரது உறவினர்களின் முச்சக்கரவண்டி, எல்ப்ரக வடி வாகனம் என்பனவற்றை சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த நகைகள், ஒரு இலட்சம் ரூபாய் பணம், வீட்டின் உரிமையாளர் வடை வியாபாரம் செய்யும் அனுமதிப் பத்திரம் என்பற்றை கொண்டு சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளரின் உறவினர் ஜ.முஸ்தகீன் தெரிவித்தார்.

இதன்போது தாக்குதலுக்கு இலக்காகிய வீட்டின் உரிமையாளர் ஜ.றிஸ்வான், மனைவி பாத்திமா றிஸ்மியா, மச்சாள் றிசானா, மருமகன் சியான் ஆகியோர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]